புதன், 17 நவம்பர், 2021

பிரசன்னம் ஏன் பார்க்க வேண்டும்???

 முன் குறிப்பு


 உபாசனை தெய்வம் பற்றி முன்பு எழுதப்பட்ட கட்டுரையை படித்துவிட்டு,  என்னுடைய தனிப்பட்ட இன்பாக்ஸில் சிலர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் முறையிலேயே,  இந்த பதிவு.  பிடிக்காதவர்கள்,  நம்பிக்கை இல்லாதவர்கள் கடந்து போய்விடலாம். 
__________________________ 

ஜாதகத்திற்கும் பிரசன்னத்துக்கும் என்ன வேறுபாடு??? 
************************* 

ஜாதகத்தில் கர்ம வினைகளை பற்றி பெரிய அளவில் பேசப்படுவதில்லை.  பிரசன்னத்தில் கர்மாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். 

ஜாதகத்தில் பலன்கள் கூறப்படுவது பொதுவாக அமையும்.  பிரசன்னத்தில் பலன்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும். 

ஜாதகம் கணிப்பதற்கு பிறப்பு நேரம் அவசியம்.  சில நேரங்களில் நேரம் தவறாக கொடுக்கப்பட்டு விட்டால் பலன்களும் மாறும்.  ஆனால் பிரசன்னத்தில் எந்தத் தவறும் ஏற்பட வாய்ப்பில்லை. 

 பிரசன்னத்தை ஒரு குடும்பத்துக்கு அல்லது ஒரு கோவிலுக்கோ,  தனிப்பட்ட ஒரு குலத்துக்கோ பார்க்க முடியும். 
ஆனால் ஜாதகம் தனிப்பட்ட நபருக்கு பார்ப்பது நடைமுறையில் மிக அதிகம் . 

ஜாதகத்தில் தீர்வு காணமுடியாத பிரச்சனைகளை  பிரசன்னத்தின் மூலம் கண்டுபிடித்து விட முடியும். 

ஜாதகத்தில் கஷ்ட நஷ்டங்களை தெரிந்து கொள்ளலாம்.  பிரசன்னத்தில் கஷ்ட நஷ்டங்களை தீர்த்துக் கொள்ள வழி இருக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியும்.  முடியுமென்றால் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும். 

பிறந்த ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக ஜாதகம் சுட்டிக்காட்டினால் அந்த தோஷத்தின் தற்போதைய நிலை என்னவென்று பிரசன்னத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். 

பரிகாரம் உண்டா இல்லையா ??  பரிகாரங்கள் செய்தாலும் பயன் இருக்குமா ?  என்பதை பிரசன்னமே துல்லியமாக சொல்லும். 

பிரசன்னம் எதற்காக பார்க்கப்படுகிறது

************************** 

ஒரு குடும்பத்தில் தொடர்ந்து ஆண் குழந்தைகளாகவே பிறப்பது. 
பெண் குழந்தைகள் இல்லாமல் இருப்பது. 

தொடர்ந்து பெண் குழந்தைகள் மட்டுமே பிறப்பது.  ஆண் குழந்தைகள் இல்லாமல் இருப்பது.  அல்லது இறந்து விடுவது 

ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்கும்போதே ஊனமாக பிறப்பது. 

ஒரு குடும்பத்தில் தொடர்ந்து ஆண்வர்க்கம் அல்லது பெண் வர்க்கம் ஏதாவது ஒன்று நசித்துக் கொண்டே வருவது. 

ஒரு குடும்பத்தில் குழந்தைபாக்கியம் ஏற்படாமல் வம்சம் நின்று போதல். 

ஒரு குடும்பத்தில் சித்தப் பிரமை பிடித்தவர்கள் போல இருப்பது . 

கடன் தொல்லையால் குடும்பமே கஷ்டப்படுவது. 

குடும்பத்தில் தாய் தகப்பன் நல்லவர்களாக இருந்து குழந்தைகள் கெட்டவர்களாக இருப்பது . 

தலைமுறை தலைமுறையாக கோர்ட், கேஸ்,  வம்பு,  வழக்கு இருந்து கொண்டே இருப்பது . 

தீராத நோய்கள். 

தொடர்ந்து துர் மரணங்கள் 

ஒரு குடும்பத்தில் திருமண வயது ஆகியும்,  திருமண வயதை கடந்தும் அந்த குடும்ப வாரிசுகளுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது. 

பருவ வயதை கடந்தும் ஒரு பெண் ருதுவாகாமல் இருப்பது. 

தொழிலில் எல்லா திறமைகளும் இருந்தும், 
தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவது. 

குடும்பத்தில் அனைவரும் நல்ல பக்தி உணர்வோடு இருந்தாலும்,  தெய்வ அனுக்கிரகம் இல்லாமல் போவது. 

வீட்டில் பாம்பு புற்று தோன்றுவது. 

குலதெய்வமே தெரியாமல் இருப்பது அல்லது குலதெய்வ தோஷம். 

தனக்கு எப்போதும் துணை இருக்கக்கூடிய உபாசனை தெய்வத்தை தெரிந்து கொள்வதற்கு. 

ஏதாவது ஒரு முடிவு அறியமுடியாத கேள்வி இருந்து அதற்கு பதில் அறிந்து கொள்ள.... 

போன்ற காரணங்களுக்காகவே பெரும்பாலும் பிரசன்னம் பார்க்கப்படுகிறது.

தெய்வங்கள்



நமது வாழ்க்கையில் நம்மோடு சம்பந்தப்பட்ட, அல்லது சம்பந்தப்பட போகின்ற தெய்வங்கள் நான்கு வகைப்படும்.  அவை குலதெய்வம், குடும்ப தெய்வம்,  இஷ்டதெய்வம்,  மற்றும் உபாசனை தெய்வம்...

குலதெய்வம்:-  நம்முடைய முன்னோர்கள் வழி வழியாக வணங்கி வந்த தெய்வம்,  தன்னுடைய பங்காளிமார்களுக்கும் தாயாதிமார்களுக்கும் மொத்தமான ஒரு தெய்வம்.


குடும்பதெய்வம்:-  

இது ஒரு குடும்பத்துக்கான தெய்வம் மட்டுமே . அந்த குடும்பத்தில் முன்பு வாழ்ந்து மறைந்த ஒருவராக பெரும்பாலும் இருக்கக்கூடும். ஏதாவது முக்கிய திருவிழாக்களின் போதும் , குடும்ப விசேஷங்களின்போதும் புது துணி வைத்து வணங்குவார்கள்

இஷ்டதெய்வம்:-  

இவை பின்னாளில் நாம் தேர்ந்தெடுத்து,  நமக்கு பிடித்து வணங்குகின்ற  தெய்வம்.

உபாசனை தெய்வம் :-  உபாசனை தெய்வமானது நமக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக, எங்கு சென்றாலும் எதை செய்தாலும்,  நமக்கு வெற்றியைத் தேடித் தருகின்ற சக்தியாகவும்,  நம்முடைய வாழ்வின் எல்லா சம்பவங்களிலும் உடனிருக்கும் துணையாகவும் இருக்கும்.

இந்த உபாசனை தெய்வம் அனைவருக்கும் ஒன்றாக இருக்காது.  ஒவ்வொருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகளைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.  இதை ஜாதகத்தின் மூலமாக அறிவதில் கூட சில நேரங்களில் தவறுகள் வந்துவிடக் கூடும்.  ஆனால்  பிரசன்னம் மூலமாக தேர்ந்தெடுக்கும்போது,100% நமக்கு பொருத்தமான உபாசனை தெய்வத்தை தேர்ந்தெடுத்து நாம் வணங்கி உபாசனை செய்து வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை  பெற முடியும்.

(நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்காக எழுதுகிறேன் அவ்வப்போது இதுபோல எழுதுமாறு கேட்கிறார்கள். எழுதலாமா??)



Saliya maharishi